தண்ணீர் வராது… கண்ணீர் தான்…



தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி..
மூன்றாம் உலகப்போர் என்றொன்று வருமேயானால் அது நீருக்கும் சோற்றுக்கும் தான் என்ற வாக்கியத்தைத் தமிழக மக்களுக்கு அடிக்கடி நினைவு படுத்துவது நதிநீர் பிரச்சனைதான். ஏற்கனவே  தீப்பிழம்பாய் எரிந்து தீர்வின்றி முடிந்த காவிரி பிரச்சனை ஒருபுறமிருக்க, போராடித் தீர்த்த மேகதாட்டு பிரச்சனை மறுபுறமிருக்க, அடுத்த பிரச்சனையாய் தலைதூக்கியுள்ளது தென்பெண்ணை விவகாரம். வேந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல வடதமிழகத்தின் நீர் பாசனத்திற்குப் பெரிதும் உதவும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்ற அனுமதியளித்துள்ளது.
50 மீட்டர் உயரத்தில் அணை
கர்நாடக மாநிலம் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் நீரானது கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு தென்பெண்ணை நதியாக நுழைகிறது. கொடியாளம் தடுப்பணையைத் தாண்டி ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மற்றும் பாடூர் ஏரிகளை நிரப்பி தருமபுரி மாவட்டம் வழியாகத் திருவண்ணாமலை சாத்தனூர் அணையைக் கடந்து விழுப்புரம், கடலூர் ஆகிய ஊர்களில் ஆறாய் ஓடி வங்காள வரிகூடாவில் கலக்கிறது. இந்நிலையில் கர்நாடக அரசாங்கம் தன்பண்ணையின் கிளை நதியான மார்கண்டேயே நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. சரளமாகத் தமிழகத்தை நோக்கி ஓடி வரும் நீரை தங்கள் தேவைக்காக பிடித்தம் செய்யவே இவ்வாறான திட்டங்களை அமல்படுத்துகிறது. 
அரசு விரைந்து செயல்பட வேண்டும்
இது குறித்து தமிழக விவசாய சங்க தலைவர்கள் பி.ஆர் பாண்டியன் அவர்களிடம் பேசியபோது “தமிழகத்தில் பருவமழை போதியளவு பெய்யவில்லை என்பதே தமிழக மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம். இந்நிலையில் வடமாநிலத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதியளித்திருப்பது பெருந்துயரே. இதனால் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் நீரின் வரத்து நிச்சயம் குறையத் தொடங்கும். கர்நாடக அரசின் இந்த செயல்பாடுகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. இந்த தென்பெண்ணை நதிநீர் விவகாரத்தில் அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கும் மாநில அரசு மத்திய அரசிடம் தமிழகம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் எடுத்துக் கூறியிருக்க வேண்டும். அதனை செய்யாதது கண்டனத்திற்குரியதே. அதேபோல் நீதிமன்றத்தில் வழக்கைக் கையாண்ட விதமே சரியல்ல என்பதை உச்சநீதிமன்றமே தெளிவு படுத்தியுள்ளது. நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு நீரை வரவிடாமல் செய்வது இது ஒன்றும் முதல்முறையல்ல. இதே சூழலைத் தான் மேகதாட்டு ஆற்றின் குறுக்கே அணை கர்நாடகா அணைக்கட்ட முயற்சித்தது இது வாழ்வாதார பிரச்சனை என்பதால் முதல்வர் உடனடியாக  சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டுஉச்ச நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துதமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டி வட மாவட்ட மக்களுக்கான இடையூறு வராத வண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். 
அரசின் கவனக் குறைவே காரணம்..
திமுக செய்தி தொடர்பாளர் சரவணனிடம் பேசியபோது “இந்த விவகாரத்தில் அதிமுக அரசு வழக்கைக் கையாண்ட விதம் அதிருப்தி அளிக்கிறது. ஆட்சியாளர்களின் சொந்த வழக்கிற்கு தலைசிறந்த வழக்கறிஞரை நியமிக்கும் அதிமுக. இதுபோன்ற வழக்குகளைச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றது. கர்நாடகாவில் ஆட்சியிலிருப்பது பாஜக, அதாவது அதிமுகவின் கூட்டணிக் கட்சி. தமிழக நலன் பாதிக்கும் என மத்திய அரசிற்கு எடுத்துக் கூறி பிரச்சனைக்குத் தீர்வு காணலாமே? ஆனால் இதுகுறித்து பேசவே அதிமுக அரசு அச்சம் கொள்கிறது. சட்டப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதால் தமிழக அரசு இனியாவது மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்கிறார். 
  
அரசித் தரப்பு பதிலாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேலுடன் பேசியபோது “தலைசிறந்த நிர்வாகத் திறன் கொண்ட அரசியல் தலைவர்களால் இயக்கமும் அரசும் முன்னெடுக்கப்படுகிறதுதென்பெண்ணை ஆறு விவகாரத்தில் சட்ட போராட்டத்தில் அரசு தோல்வியடையவில்லைஇது ஒரு இடை நிற்றல் தானே தவிர இறுதித் தீர்ப்பல்ல. அடுத்தடுத்த கட்டங்கள் குறித்துக் கலந்து ஆலோசிக்கப்பட்டு மக்கள் நலம் சார்ந்த முடிவெடுக்கப்படும். இதற்கு முன்னர்மத்திய அரசு பாரபட்சமின்றி செயல்படும் என்ற நம்பிக்கையுள்ளதுநதிநீர் விவகாரங்களில் அதிமுக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறதுகடந்த கால செயல்பாடுகளே இதற்குச் சாட்சி. ஆரம்பக் கட்டத்தில் தீர்ப்பு வேறு என்றாலும் தமிழக அரசின் முயற்சியால் காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் கட்டப்படவிருந்த அணை தடுத்து நிறுத்தப்பட்டதுசட்ட போராட்டத்தை தொடர்ந்து தேவைப்பட்டால் அரசியல் போராட்டத்தை நடத்தவும்  அதிமுக தயங்காது என்றார். திமுக ஆட்சியிலிருந்த போது மக்கள் நலம் சார்ந்து எதுவும் செய்யவில்லை, ஆனால் எல்லாம் செய்துவிட்டதுபோல் அதிமுகவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல” என்கிறார் வழக்கறிஞர் பாபு முருகவேல்.
சட்டம் சொல்வதென்ன?
இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் ஒரு தரப்பு தனிப்பட்ட முடிவு எடுக்கக்கூடாது என்றும் Interstate water disputes என்னும் சட்டத்திருத்தத்தின் படி இரு மாநிலங்களுக்கு இடையே புரிதல் இருந்தால் மட்டுமே திட்டங்களை அமல்படுத்த வேண்டும், தேவைப் பட்டால் மாநில மத்திய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு வாரியம் அமைத்து இதன் மூலம் தீர்வு காணலாம் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு தலையிடுமா?
கர்நாடக அரசு மேகதாட்டு அருகே அணைக் கட்ட முயன்றபோது ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்ததன் விளைவாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதனை விசாரித்த பின்னர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலத்திற்கும் உடன்பாடு எட்டினால் மட்டுமே அனுமதி எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  இதேபோல் தென்பெண்ணை விவகாரத்திலும் தமிழகம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கும் தடை விதிக்குமா? என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழகம்.


Comments